அருளொளி மார்க்கத்தின் ஒரு சுருக்கமான வரலாற்று பின்னணி
சத்குரு ஜெகந்நாத சுவாமிகள்
இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) அவதரிப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெகந்நாத சுவாமிகள், தை மாதத்தில் கல்கத்தா, இந்தியாவில் அமைந்திருக்கும் பூரி என்ற ஊரில் 1814-ஆம் ஆண்டு பிறந்தார். இராமலிங்க அடிகளின் கொள்கைகளைப் பின்பற்றிய ஜெகந்நாத சுவாமிகள், தனது பதினெட்டாவது வயதில் இந்தியாவிலிருந்து சிட்டகாங்கிற்கும், பின்னர் தாப்பா மலேசியாவில் சுமார் 1920ஆம் ஆண்டில் குடியேறினார். ஜெகந்நாத சுவாமிகள் 145 ஆண்டுகள் வாழ்ந்தார். ஜனவரி 25, 1959-ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று அதிகாலை 4.30 மணிக்குச் சுவாமிகள் தாப்பாவில் ஜீவ சமாதி அடைந்தார்கள். ஜெகந்நாத சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் பனைக்குளத்தைச் சேர்ந்த சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகள் ஆவார்கள்.

சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகள்
சித்ரமுத்து அடிகள் 1900-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் பனைக்குளத்தில் பிறந்தார். முத்து 1922-ஆம் ஆண்டில் மலாயா நாட்டிற்குப் புறப்பட்டு, பேராக் மாநிலத்தின் குவாலா காங்க்சாரில் தங்கினார். தாப்பா பகுதியில் ஜெகநாதர் சுவாமியைச் சந்திக்கும் பாக்கியம் முத்திற்குக் கிடைத்தது. ஜெகநாதர் சுவாமி முத்தைத் தனது சீடராக ஏற்று, அவருக்கு சித்ரமுத்து என்ற தீட்சாநாமம் சூட்டினர்.
ஜெகநாதர் சுவாமி தனது சீடரான சித்ரமுத்துவிற்கு ஆத்ம ஞானத்தை உணருவதற்கும், அவருடைய முழு திறமையை வெளிக்கொணருவதற்கும், மற்றும் அவரது வாழ்க்கை நேயத்தை உணருவதற்கும் வழிகாட்டினார்.


Empowerment
மலாயா மற்றும் தமிழ்நாட்டில் சீடர்கள்
1940-ஆம் ஆண்டு, தைப்பிங் ஆற்றின் அமைதியான கரையில், ஆயாசம் அகன்று காயாசம் ஏற்றார். பின்னர் மலாயாவில் சன்மார்க்கத்தைப் பரப்புவதற்கு முழுமையாக உழைத்தார். மற்றும் பணம் காசை கரத்தால் தீண்டோம் எனப் பாரதமாதா மீது ஆணையிட்டுக் கடைப்பிடித்தார். அந்த காலகட்டத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய இராணுவத்தில் (INA) குறுகிய காலத்திற்கு இணைந்தார். 1947-ஆம் ஆண்டில் தமிழ் நாடு திரும்பி, தனது மனைவி மற்றும் குடும்பத்தாரின் வாழ்விலும் சன்மார்க்கத்தின் வழிகளைப் போதித்தார். தனது வீட்டை ஒரு ஆன்மீக கல்வி மையமாக மாற்றி, அதற்கு அருளொளி மடம் என்று பெயரிட்டார்.

மலேசியாவில் தவம்
அடிகள் மலேசியாவில் உள்ள பல முக்கிய ஆலயங்களில் வணங்கி தவமும் செய்துள்ளார்கள். இவரது ஆன்மீ கப் பயணத்தில், அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில் (பினாங்கு), மகா மாரியம்மன் கோவில் (ஈப்போ), ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் (பத்து காஜா), கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில், கந்தசுவாமி கோவில் (பிரிக்பீல்ட்ஸ்), ஆதி ஈஸ்வரன் கோவில் (செந்தூல்), ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் (ஜாலான் பண்டார், கோலாலம்பூர்), மற்றும் ஸ்ரீ சிவன் கோவில் (ஜாலான் சுங்கை பெசி, கோலாலம்பூர்) ஆகியவற்றில் தவம் செய்துள்ளார்கள். மேலும், அடிகளார் கோலாலம்பூரில் பல்வேறு ஆலயங்களுக்கும், சிங்கப்பூரின் ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கும் சென்று தியானம் செய்துள்ளார்.
மேலும், 1971 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி, பினாங்கு கொடி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயத்தில் 'யந்திர ஸ்தாபகாராக' பங்காற்றியுள்ளார்கள்.
அருளொளி மார்க்கம் நிறுவுதல்
இந்தியாவிலும் மலாயாவிலும் பல அருளொளி மார்க்க சபைகளை நிறுவினார். அவர் தமிழில் எழுதியுள்ள பல பாடல்கள், பின்னர் அருளொளி என்ற நூலாகத் தொகுக்கப் பட்டது. குருமதிமாலை, திருப்புகழ் திரவியம், பேரின்பக் குறள், மௌநானந்த மணி மொழிகள், மரணச் சிந்தனை, ஞானப் பண்டிதன், நிறை நெறி மொழிகள், சீர் திருந்து மனிதா, கருணைக் கண்ணீர், கிருபை பிரகாச பொக்கிஷம், அருளொளி மலர், காந்தியின் திருவருட் புலம்பல் ஆகியவை சித்ரமுத்து அடிகள் எழுதிய நூல்கள் ஆகும்.

ஆத்ம சாந்தி நிலையத்தை நிறுவுதல்
1958-இல் அழகன் குளத்தில் ஆத்ம சாந்தி நிலையம் நிறுவப்பட்டது. ஆத்ம சாந்தி நிலையம் தாய் வீடு எனப் பெயர் பெற்று தீப தரிசன திருவிழா ஆண்டு தோறும் 7-ம் நாள் சித்திரை மாதம், சித்ரமுத்து அடிகள் பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
மலேசியாவில் துன் வி.டி சம்பந்தன் தலைமையில் 1960-இல் அருளொளி மன்றம் உருவாக்கப்பட்டது. மலேசிய அரசாங்கம் ஈப்போவில் ஒரு நிலத்தை நன்கொடையாக வழங்கி, அங்குக் கட்டிடம் கட்டி முடிந்ததும் அப்போதைய பேராக் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹாஜி கமருடின் பின் ஹாஜி ஈசா அவர்களால், 11 பிப்ரவரி 1973-ஆம் ஆண்டு திறப்பு விழா கண்டது. அருளொளி மார்க்கம் அதன் பின்னர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் நிறுவப்பட்டது.

சமாதி மண்டபம் கட்டுதல்
1991-ம் ஆண்டு சமாதி மண்டபம் கட்டி முடித்து சிவ ஸ்ரீ முத்துக்குமார சிவாச்சாரியார் 1991-ம் ஆண்டு சிவராஜ கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடத்தினார். சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகள் ஞாயிற்றுக்கிழமை மே 5, 1995 அன்று கேசரி முத்திரை இட்டு மகா சமாதி அடைந்தார்கள். சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகளாரின் விரிவான வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய வாழ்க்கை விளக்கம் எனும் அத்தியாத்தை அருளொளி புத்தகத்தில் படித்து மேலும் தெரிந்துக் கொள்ளலாம்.

மலேசிய அருளொளி நற்பணி மாமன்றத்தின் உருவாக்கம்
சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகளார் போதனைகள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் 2019 ஜனவரியில் மலேசிய அருளொளி நற்பணி மன்றம், மலேசியா அரசாங்கத்தின் சங்கப் பதிவு இலாகாவின் கீழ் அதிகாரப்பூர்வமாக முனைவர் தேவன் இராமநாதனால் பதிவு செய்யப்பட்டது.
ஐந்து ஆண்டுகள் சேவைக்குப் பிறகு, 2024 ஆண்டு பொதுக்கூட்டத்தில், மலேசிய அருளொளி நாற்பனி மன்றம் என்ற பெயர் "மலேசிய அருளொளி நற்பணி மாமன்றம்" என மாற்றம் கண்டது.
